அம்மா 5.0

அம்மா 5.0
Published on

அன்றைக்கு சென்னையில் அடிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் வந்து குவிந்திருந்தனர் அதிமுகவினர். அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களின் ‘அம்மா’ விடுதலை பெற்றுவிட்டார்.  மீண்டும் முதல்வர் ஆகப்போகிறார். அவரை ஒரு கணமாவது நேரில் கண்டாகவேண்டும். மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டும். இதில் கோடை வெயிலாவது.. மழையாவது..?

இருநூறு நாட்களுக்கும் மேலாக போயஸ் தோட்டத்தில் கழித்துவிட்டு, உயர்நீதிமன்ற விடுதலை உத்தரவை அடுத்து வெளியே வந்த ஜெயலலிதா, மீண்டும் முதல்வர் ஆகியிருக்கிறார். அவர் முதல்வர் பதவி ஏற்பது இது ஐந்தாவது முறை.

ஆட்சியில் இருக்கும்போது தண்டனை வழங்கப்பட்டு பதவி இழக்க நேரிட்ட முதல் அமைச்சர் என்ற பழி, அவரையும் அதிமுகவினரையும் பொறுத்தவரை இந்த விடுதலைத் தீர்ப்பால் நீங்கிவிட்டது.

நீதிபதி குமாரசாமியின் கூட்டல் கழித்தல் தவறுகள் இப்போதைக்கு ஜெயலலிதாவைத் தீண்டப் போவதில்லை. இருப்பினும் உச்சநீதிமன்றம் எப்படி எதிர்வினை புரியும், யார் மேல்முறையீடு செய்வார்கள் என்பதெல்லாம் சில நாட்களில் தெரிந்துவிடும்.

நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பின் மூலம் ஜெயலலிதா 21 நாட்கள் சிறையில் இருந்த காலத்தில் இச்செய்தியைக் கேட்டு 193 பேர் அதிர்ச்சியிலும் தற்கொலை செய்துகொண்டும் இறந்ததாகச் சொல்லப்பட்டது. அவர் பெங்களூரு சிறையில் இருந்து பிணையில் விடுதலை ஆனதும் விடுத்த முதல் அறிக்கையிலேயே தான் நெருப்பாற்றில் நீந்துவது போன்ற அரசியல் வாழ்க்கையை மேற்கொண்டிருப்பதாகச் சொன்னவர், இறந்த 193 பேர் குடும்பத்துக்கும் தலா 3 லட்ச ரூபாயை வழங்குவதாக அறிவித்தார்.

பின்னர் மேல்முறையீட்டுக் காலத்தில் என்னதான் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தாலும்கூட ஜெயலலிதாவிடம் இருந்து இது போன்ற அறிக்கை  மட்டும் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. ‘தயவு செய்து யாரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளவேண்டாம்.  இறந்தவரின் குடும்பத்தாருக்கு 3 லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது’.

கடைசியில் உயர்நீதிமன்றம் விடுதலை வழங்கிய பின்னும் கூட அவர் பதவி ஏற்க தாமதம் ஆகிறதே என்று கூட சிலர் செத்துப்போனார்கள்.

செத்துப்போனவர்களின் பட்டியல் நீளமாகிக் கொண்டிருப்பதை தடுப்பதற்காகவாவது அவர் சீக்கிரம் பதவி ஏற்கக்கூடாதா என்று தோன்றியது உண்மை!

நாட்டு விடுதலைக்குப் பின்னர் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தலைவர்களுக்காகவும் சரி; கொள்கைகளுக்காகவும் தொண்டர்கள் தற்கொலை செய்துகொள்வது என்பது ஒரு ‘கலாசார நிகழ்வாகவே’ (இந்த சொல்லைப் பயன்படுத்துவதற்காக மன்னிக்க வேண்டும்!) இருக்கிறது.

தங்கள் பிரியத்துக்குரிய தலைவர்கள் அந்த இழப்பு தாளாது தற்கொலை செய்தோ, அதிர்ச்சியாலோ உயிர்விட்டவர்கள் இன்னொரு ரகம். அண்ணா இறந்தபோது உயிர்விட்டவர்கள், எம்ஜிஆர் இறந்தபோது அதிர்ச்சியால் செத்தவர்கள்- என்று நாம் சொல்லிக் காட்டலாம்.  திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டபோது தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டவர்கள், இப்போது ஜெ. சிறைக்குச் சென்றபோது தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டவர்கள் இதுபோன்ற இன்னொரு வகையினரும் உள்ளனர்.

தியாகி சங்கரலிங்கனார், மொழிப்போர் தியாகிகள் என்று ஒவ்வொரு ஆண்டும் பெருமைப்படுத்தப்படுவோர், ஈழப்பிரச்னைக்காக தன் இன்னுயிரை  ஈந்து தன் உடலை ஆயுதமாக்கிய முத்துக்குமார், தூக்குத்தண்டனையிலிருந்து மூவரை விடுவிக்க தீக்குளித்த செங்கொடி.. இது கொள்கைக்காகவும் இனத்துக்காகவும் உயிர் ஈந்த பட்டியல். இந்த ஈகையில் ஓர் அர்த்தம் இருப்பதாகக் கொள்ளலாம்.

தங்களுக்குப் பிடித்த ஒரு தலைவரையோ நடிகரையோ கடவுளாக வழிபடும் பழக்கம் தமிழர்களுடையது. நடிகரே தலைவராக இருந்துவிடும் பட்சத்தில் இந்த வழிபாட்டு மனநிலை பன்மடங்காகிவிடுகிறது. இதைத் திராவிடப் பண்பு என்று சொல்ல இயலாது.

பக்கத்தில் கேரளத்திலோ, கர்நாடகாவிலோ, ஆந்திராவிலோ இந்த  மனநிலை இல்லை. இது தூய சான்றிதழ் பெற்ற தமிழ்ப்பண்பு.

மன்னர்கள் காலத்தில் போரின் போதோ, உடல் குன்றிய மன்னன் நலம்பெற வேண்டும் என்பதற்காகவோ இப்படி உயிர்த்தியாகம் செய்வதும் அவர்களின் குடும்பத்துக்காக அரசனே நிலம் எழுதி வைப்பதும் நடுகல் நாட்டுவதுமாக பழக்கம் இருந்ததை கல்வெட்டுகள் சொல்கின்றன. இந்த ஆயிரக்கணக்கான ஆண்டுப் பழக்கத்தின் நவீனத் தொடர்ச்சியே இது.

இந்த மரணத் தொடர்ச்சியின் மறுபக்கமே கோயில்களில் நடந்த மகாவழிபாடுகள். இம்மாதிரி பெரிய அளவில் வழிபாடுகள் நடந்தது எம்ஜிஆர் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்றிருந்தபோது. ஆனால் இன்று சிறையிலிருந்து அம்மா விடுதலை பெறவேண்டும் என்பதற்காகவும் அவர் மீதான தண்டனையிலிருந்து விடுதலைபெற வேண்டுமென்பதற்காகவும் செய்யப்பட்ட பிரார்த்தனைகள், காவடிகள், பால்குடங்கள், முளைப்பாரிகள், தீமிதிகள், அபிஷேகங்கள், யாகங்கள், அர்ச்சனைகள், மொட்டைகள், வேண்டுதல்கள், உடல் உறுப்பு காணிக்கைகள் எவ்வளவு எவ்வளவு? ஜெவுக்காக கண்ணீர் விட்டு கசிந்துருகி பிரார்த்தனை செய்த நிஜமான அதிமுக தொண்டர்கள் பலருக்கு அவரை அருகில் பார்த்து ஒரு வார்த்தைகூடப் பேச வாய்ப்பிருக்கப்போவதில்லைதான். ஆனாலும் அவர்களது இதயம் ஏங்குகிறது. வழிபாட்டு மனநிலையின் தொடர்ச்சிதான் இது. போலிகள், பொய் முகங்கள், கடமைக்காக செய்யப்பட்ட யாகங்கள் இதிலும் உண்டுதான்!

தமிழக அரசியலில் கோவிலுக்குச் செல்வதும், மதச்சின்னங்களைப் பயன்படுத்துவதும் சினந்து நோக்கப்பட்ட காலங்களும் உண்டு. இன்று ஜெவுக்காக செய்யப்பட்ட யாகங்களை நோக்கும் போது கனிமொழியும் ஆ.ராசாவும் 2ஜி வழக்கில் சிறையில் இருந்தபோது இப்படி வழிபாடுகளை நடத்தியிருக்கலாமோ என்ற சபலம்கூட திமுகவினருக்குத் தோன்றியிருக்கலாம்!

அதிமுக இதுகாறும் தமிழக அரசியலுக்குள்  தயங்கித் தயங்கி நுழைந்திருந்த கோயில்வழிபாடுகள், யாகங்கள், போன்றவற்றுக்கு வெளிப்படையான அங்கீகாரம் அளித்துள்ளது. திமுகவிலும் இது இலைமறை காய்மறையாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. வெளிப்படையாக நடக்க இனிமேல் அதிக காலம் பிடிக்காது!

நாடு விடுதலைபெற்றபோது நேரு நாத்திகராக இருந்தார். கம்யூனிஸ்ட் தலைவர்கள் நாத்திகராக இருந்தார்கள். தமிழ்நாட்டில்  பெரியார், அண்ணா, கருணாநிதி என்று நாத்திகத் தலைவர்கள் வரிசை இருந்தது. சில காலம் முன்பு வரை நெற்றியில் குங்குமம் வைத்தவர்கள் திமுகவில் தூக்கிய புருவத்துடன் பார்க்கப்பட்டார்கள். அதன் தலைவரே நெற்றியில் குங்குமம் வைத்திருந்த தம் கட்சிப்பிரமுகரைப் பார்த்து நெற்றியில் என்ன ரத்தமா வழிகிறது என்று கிண்டல் செய்தார். கொஞ்ச ஆண்டுகளில் அவர் வீட்டுக்கே சாய்பாபா வந்துவிட்ட மாற்றம் நிகழ்ந்தது! ஆன்மீகம் பெற்ற வெளிப்படையான அரசியல் அங்கீகாரம்.

இன்றைய ஊடகப் பெருக்க உலகில் தமிழ்ச் சமூகத்தில் கட்சித் தலைவர்கள் பெறுகின்ற வழிபாட்டு பிம்ப மதிப்பீடுகள் மிக அதிகம். அவர்கள் மீது நீதிமன்றமோ, சட்டமோ எதுவோ என்ன குற்றத்தை நிரூபித்தாலும் அது அவர்களது வழிபாட்டாளர்கள் மனதில் மாற்றத்தை உண்டுபண்ணுவதில்லை! அரசியலில் அதை எதிர்க்கட்சிகளின் சதி என்று கடந்துபோய்விடலாம்!

ஜெயலலிதாவின் ஐந்தாவது முதல்வர் நாற்காலிப் பிரவேசம் அவருக்குப் பெருகியிருக்கும் வழிபாட்டு பிம்ப ஒளிவட்டத்தையே நம்முன்னால் நிரூபித்துக் காண்பிக்கிறது. இப்படிச் சொல்வது அறிவுஜீவிகளுக்குப் பிடிக்காமல் போகலாம்!

ஆனால் அம்மா உணவகங்களிலும் நியாயவிலைக் கடைகளிலும் இன்னும் பிற அரசின் இலவசத் திட்டங்களிலும் நுகர்வோராக இருக்கும் ஏழை, விளிம்பு நிலை மக்களிடம்  இன்று ஜெ.  ஓர் அசைக்க இயலாத இடத்தைப் பெற்றிருக்கிறார். இது எம்ஜிஆர் போன்று திரைப்படங்களில் ஏழைப்பங்களானாக, போராளியாக நடித்ததன் மூலம் வந்தது அல்ல. பல ஆண்டுகளாக எம்ஜிஆர் மிகுந்த கவனத்துடன் தன் பாத்திரங்களை திரையில் உருவாக்கிப் பெற்ற பிம்பம்தான் அவரது அரசியல் வெற்றிக்கு வழிகோலியது என்பார் மறைந்த அறிஞர் எம்.எஸ்.எஸ். பாண்டியன். ஆனால் ஜெ. பெற்றிருக்கும் ‘தாய்’ என்கிற எல்லோரையும் அன்புடன் அரவணைத்துக் காக்கும் பிம்பம் எம்ஜிஆரே பொறாமைப் படக்கூடியது. இப்பிம்பம் எந்த அளவுக்கு ஏழைமக்களிடம் இருக்கிறதோ அதே அளவுக்கு படித்த நகர்ப்புறவாசிகளிடமும் இருக்கிறது என்பது ஆச்சரியம்!

அம்மா 5.0. புதியதாக அறிமுகமாகியிருக்கும் பிம்பம்! தன்மீது இப்படி கண்ணை மூடி அன்பு செலுத்தும் மக்களுக்கு அவர் நிறைய செய்யவேண்டியிருக்கிறது!

ஜூன், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com